Saturday, 29 June 2024

உண்மையுணர்வு

 உண்மையுணர்வு


கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் வழியில்

பயணம்

உண்மையின் முகம்பார்க்க கூசி

மண்டியிட்டு பிரார்த்தனை

செவி சாய்ப்பாரா? வாழ்க கோஷம்

முடிந்தது. மயக்கத்தில்  வாழ்வை

வைத்திருந்தவன்

கூட்டம் கூடியவர்களின் தோள்களில்

அடிமையாகி உழைக்க காந்திருந்தனர்

இடறி விழ இருந்தோம்

குறிப்பானையின் கேள்வியில் சுடர் அழிந்தது 

வயிற்றெரிச்சலோடு எவ்வளவு காலமிருப்பீர்  ,

இருங்கள் காத்திருப்போம்

உணர்வுகளின் அடிப்படையில் வாழ்கை

என்றால் 

சொல்லை வெளிப்படுத்தும் முன் இருந்தது உணர்வா , உணர்ச்சியா:

தொக்கி நின்றது கேள்வி

இன்னொருவர் நேரத்தை விரயம்

செய்ய அனுமதி இல்லை

காலம் பதில் சொல்லும் என்றது

உண்மையுணர்வு


கலித்தேவன்.

Thursday, 27 June 2024

உரிமை?

 

உரிமை ?💋





நீண்ட நாட்களுக்கு பிறகு 

கண்களினுடே பார்க்க நேர்ந்தது 

ஆழ்ந்த அன்பினால் விளைந்த

இனிய புன்னகையினுடே விலக்கம்


மன இறுக்கத்தினால் காமத்திலாடிய

பின்னே வெறுமையின் ஊற்று அதிகம்

சுரந்தது

இதழ்களின் சுழிப்பால் ஊறி வந்த 

உணர்வுகள் ஒடுங்கின

மன இறுக்கம், உடலிறுக்கம், உறவிலக்கம் 

காரியமே காரணமாக தொடர்வது 

செயலிழப்பு

முன்னெடுப்பாரின்றி  எழுந்தடங்கிய 

சொற்களின் கொந்தளிப்பு முகத்திலறைய  விழிகளின் ஓரத்தில் நீர்


அலைக்கழிக்கப்பட்டவனின் துயரம்

மருந்தடைக்கப்பட்ட  வெடிகுண்டென

கையில்.

வீசி எறியுமுன்னே  அதியற்புத  புன்கையோடு  மனக் காட்சி  

இன்னாரு வாய்ப்பு 


வாய்ப்புகளை எடுத்துக் கொள்வதா?

பெற்றுக கொள்வதா? 



கலித்தேவன்.

Saturday, 22 June 2024

 வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில்

வேலை நிமித்தமாக போகும், வரும்

போதும் தெருமுனையில் அமர்ந்து பூ

வியாபாரம்  செய்யும் பெண்ணை

பார்பது வழக்கம்

வியாபார நேரம் தவிர எப்பொழுதும்

காதில் செல்போன்

பேசுவது பக்கத்திலிருபவருக்குக் கூட

கேட்காதவன்னம் இருக்கும்

பேசும் போது அதிர சிரிப்பதும் வழக்கம்

பூக்களின் வெண்மை போல பல்

ரோஜாவின் ஆரோக்கியமான ஈறுகள்

மஞ்சளான ,தாமரையின் வெளிறிய

நிறமும் கலந்த முகம்

காலை கடை திறக்க அழைத்துக் கொண்டு வரும் கணவன்

அருகில் போதையோடு போகும் வரை 

தரையில் கிடப்பான்

மனம் விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்வு



கலித்தேவன்.

Friday, 21 June 2024

தியானத்திலமர்ந்த போது

 தியானத்திலமர்ந்த  போது




தியானத்திற்கான மனநிலையை 

உருவாக்கும் பொருட்டு , அமைதியான

சூழ்நிலையை உருவாக்க முயற்சித்தோம்.

தியானத்தில் அமர்ந்த போது உணவின் மணம் துல்லியமாய் அறிந்தோம்.

தியானத்தில் அமர்ந்த போது பச்சைக்கிளியின் குரலை கேட்டோம்

தியானத்தில் அமர்ந்த போது இடைவிடாத எண்ணங்களின் தொடர்ச்சி

தியானத்தில் அமர்ந்த போது கடன் கொடுத்தவரின் முகம் எதிரே

தியானத்தில் அமர்ந்த போது  எப்போதோ மறந்து போன நண்பனின் ஞாபகம்

தியானத்தில் அமர்ந்த போது எண்ணங்களிடையே விட்டுவிட்டு மெளனம் 

தியானத்தில் அமர்ந்த போது ........


கலித்தேவன்.

 நாள் முழுவதும் வானம் இருண்டிருந்தது

மழை பெய்யுமா? பெய்யாதா?

கண் இமைக்கும் நேரத்திற்கும் குறைவான ஒளி இடியும்

வெற்று காற்றாய் புழுக்கமும் வியேர்வையும்

விளையாட்டாய் தலைகாட்டும் சூரியன்

நசநசத்த முழுக்க உடலையும் நனைத்த

கனன்ற பூமியிலிருந்து கிளம்பும் அனல்

முழுத் தொகை கொடுத்து வாங்க 

இயலாவிட்டாலும் மாதத்தவனையில் அறை குளிர்விப்பான்

மின்சார வாரியத்தை வாரித் தூற்றியபடி

கைவிசிறியால் விசிறிக் கொண்டிருந்தோம்.

காலத்தினால் விலக்களிக்க இயலாத

உருக்கும் வெப்பத்தினால் வெட்டப்பட

மரங்களின் கதறலையும் சேர்த்து

கதறிக் கொண்டிருந்தோம்


கலித்தேவன்.

 தவளையின் கானம்.



புதிதாக உருவாக்கப்பட்ட நகர்

நடுவிலே புதியதாக கட்டிக்கொண்டிருக்கும் வீடு

சுற்றிலும் எல்லைகற்கள் பதிக்கப்பட்ட

வீட்டு மனைகள்

தவளைகள் கூச்சல் அல்லது ஒலி 

எழுப்பினால் மழை வரும் 

குடையோடு நடந்தேன் பாதையில் வாகனங்கள் வந்து போகாத நடுவிலே 

தாவியபடி ஒரு தவளை பாட ஆரம்பித்தது

கூட்டு பாடலாய் எதிரொலித்தது

கந்தர்வ கானம் இசையமைப்பாளர் இன்றி

நின்று பார்த்தேன் ரகசிய குரலில்

மழையில் நனைவதற்கு குடை எதற்கு

என்றது 

எங்களின் குடியிருப்பை அழிக்க வந்தாலும் நீங்கள் என் விருந்தாளி

மழையில் நனைந்து உற்சாக நடனமாடலாம் வாருங்கள் 

மீண்டும் கூட்டு பாடலாய் இசை

உச்சத்திற்கு சென்றது

மழை வந்தே விட்டது.


கலித்தேவன்.

 உறவுகள்.



புறந்தள்ளி புறந்தள்ளி புறந்தள்ளி

பாதையை உருவாக்கி

அகத்தினிலே ஒவ்வாமையை வளர்த்து

வளர்த்து , இறுக்கத்தினிலே வாழ்ந்து

இறுக்கத்தினிலே மூழ்கி

முகந்திருப்பி நிற்பதிலே இன்பம்

உறவு வருவதற்கும் போவதற்குமானது

மலை போல குவித்த செல்வம்

நுண்ணுர்வுகளால் நுண்ணிய அனுக்கம்

ஒரே வீச்சில் வெட்டுப்பட்ட கிளைகள்

வேர்களால் நிற்கும் மரம்

ஆயிரமாயிரம் இலைகளால் வளர்ந்தது

நீரின்றி பட்டுப் போனால் சரி

அமிலத்தாலென்றால் ?



கலித்தேவன்

 காலம் காலமாக கடமைகளை

பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்

நடப்பவைகளையும் நடந்து முடிந்தவைகளையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்

கை பிடித்து அழைத்துச் செல்லும்

காலத்தை அதன் சுவடை தேடிக் கொண்டிருக்கிறோம்

நம்மீது அழுத்தும் அழுத்தங்களை

சுமைகளாக , விருப்பங்களாக, ஏற்றுக் கொள்கிறோம்

கடவுள் துகள்களாக கிடைக்கிறார்

மித்திர பேதம் பலிக்கிறது

ஊசி முனையின் காதினிலே யானைய நுழைத்து காட்டினான்

புதிய உலகம் பிறந்தது. உற்சவ மூர்த்தி

வேரோடு பிடுங்கப்பட்டு உடைந்து நடைபாதையானது.

காலம் காலமாக கடமைகளை பற்றி மட்டும் பேசிக்கொண்டேயிருக்கிறோம்.




கலித்தேவன்

பாம்படம்

 பக்கத்து வீட்டு வயதான பாட்டியின்

அழகே அவர் தலையாட்டியபடி

பேசுவது தான்

காது தோள்வரை நீண்டு துளை

பெரிதாகி தொங்கும் பாம்படத்துடன்

நடுங்கும் தலையின் நடுக்குதலற்கேற்ப

பேசும் போது ஆடும் பாம்படத்துடன்

அழேகே அழகு

கண்களில் கனிவும் நீர்மல்க அன்புடன் விசாரிப்பதும்

சிறு பிள்ளைகளை தன் பேரப்பிள்ளை 

போல கொஞ்சுவதும்

இனி இல்லை

காதில் பாம்படம் இல்லை. முகத்தில் கனிவும் உறைந்தபடி கண்களை முடி

நீட்ட வாக்கில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்

பாம்படம் இல்லாமல் அவளை பார்க்க

முடியவில்லை



கலித்தேவன்

வானவில்

 நேற்று மாலை பெய்த மழை

விடும் போது தோன்றிய வானவில்

வெகு ஆபூர்வமாக பார்த்தேன்

சாலையின் இருபுறமும் வளர்ந்த மரங்களுக்கிடையே அரைகோள வடிவில்

காட்சியாக கண்ணில் விரிந்தது

பாலத்தை நெருங்கும் போது பாலத்தின் 

மேல் ஒட்ட வைத்தது போல

திரும்பி கரையில் கோயிலின் விமானத்தை தழுவியது போல

தூரத்தில் பணை கூட்டத்தின் நடுவில்

ஒரு ஓவியத்தை போல

நகரின் எல்லையை நெருங்கும் போது

நுழைவாயிலை போல

குழந்தையின் பின்னனியில் தலையிலிருந்து வண்ண ஊற்றை போல

பொதுவாக தாயின் எளிமையான புன்னகையை போல

மழை நின்று வாகன பெருக்கத்தில்

சிக்கி தினறுவதை போல

மனம் ஆர்ப்பரிக்கும் தோறும் பிரகாசித்து

விரிவதை போல

நகரின் உயரமான இடத்திலிருந்து நகரின் முழுமைக்குமானதை போல

வெளிச்சம் கரைந்து இருமை கலக்கும்

அந்தியை போல கரைந்தது 


கலித்தேவன்.

மழை

 மழைநாளில் மழையோடு

மழையாய் நனைந்தேன்

எச்சமின்றி முழுதாய் 

தூவானத்தின் பெரும் தூறலால்

பூமியெங்கும் காலடித்தடங்கள்

அடர் தூசியின் நடுவே முத்திரை

உயிர்பிழைக்க காத்திருக்கும்

கரையோர நாணல்கள்


கலித்தேவன்

மொழி

 

மொழி


மொழியின் வீச்சை உணர துடித்தான்  ஒரு நீண்ட

வாழ்க்கை தேவைப்பட்டது

சொற்களின் வழியே நிறுவ தலைப்பட்டான்  

வார்த்தைகள் சுனக்கம் காட்டின , இலக்கியத்துக்காக  

எதை  பின்

தொடர வேண்டும் 

சொற்கள் உள்ளே கோர்க்கப்பட்டு

ஒலியாக பரிணமித்தது 

ஓலியினை பின்தொடர முடியுமா?

பிரார்த்தனை ஒலியை பின்தொடர்ந்தவள் சந்தித்த

நிகழ்வுகள் என்ன?

கற்பனையின் உச்சத்தில் மொழியின் சிறப்பு இலக்கியத்தின்

பக்கங்களில் நிரம்பின

மொழிகளுக்குள் கண்டடைவதின்

கூறுகளுக்குள் சிக்காமல்

வெளியேறி வால்பிடித்து ஓடி

தப்பித்தன சொற்கள்

கேள்விகள், கேள்விகள், கேள்விகள்

பதில்களை தேடின

பிடி கொடுக்காமல்  நழுவி ஓடியது 

ஒலியை பின்தொடர்ந்தவளின்

மொளனம் பேசியது , பதில்களை தேடியது.


கலித்தேவன்.


  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...